×

கூட்டணி பலத்தில் காங்கிரஸ் - அதிமுக மோதல் திருப்பம் தருமா திருவள்ளூர்?

* 10 ஆண்டாக செய்யாததை இனி செய்யப் போகிறாரா?
அதிமுகவில் டாக்டர் வேணுகோபாலுக்கு எதிர்ப்பு

கடந்த 2009, 2014 ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று 10 ஆண்டுகளாக எம்பியாக இருந்த டாக்டர் வேணுகோபால், இத்தொகுதியை கொசுக்கள் உற்பத்தி செய்யும் தொகுதியாக வைத்திருந்தார். இதனால், டெங்கு காய்ச்சலுக்கு கடந்த 2 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். எம்பிபிஎஸ் டாக்டரான வேணுகோபால் தொகுதியை சுத்தமாக வைத்திருப்பார் என நம்பினோம். அவரை நம்பியதைவிட, பல்வேறு நோய்களை தீர்த்து வைக்கும் திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாளை நம்பி இருக்கலாம் என்கின்றனர் தொகுதி மக்கள்.

தொகுதி பிரச்னைகள்
சென்னைக்கே குடிநீர் சப்ளை செய்யும் தொகுதியில் குடிநீர்ப் பிரச்னையும் தலைவிரித்து ஆடுகிறது. திருவள்ளூர் நகரில் 3 நாட்களுக்கு ஒருமுறைதான் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. தினமும் குடிநீர் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். இத்தொகுதியில், மருத்துவ கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்பேட்டை உட்பட பல்வேறு கோரிக்கைகள் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வங்கிகள் மூலம் கடந்த 5 ஆண்டுகளாக சுழல்நிதி வழங்காததால், தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் வட்டிக்கு வாங்கும் நிலை உள்ளது. இதனால், பல சுய உதவிக் குழுக்கள் திவாலாகி உள்ளன.

மகளிர் சுய உதவிக் குழுக்களை தனியார் பைனான்ஸ் நிறுவனங்களிடம் இருந்து மீட்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது. அதை தீர்க்க நடவடிக்கை தேவை என்பது பெண்களின் குறையாக உள்ளது. இத்தொகுதியில் உள்ள கூவம், கொசஸ்தலை ஆறுகளில் இரவு, பகலாக நடைபெற்று வரும் மணல் திருட்டு, பல்வேறு ஏரிகளில் இயங்கி வந்த அரசு மண் குவாரிகளால் நிலத்தடிநீர் முற்றிலும் குறைந்து விட்டது.மேலும் வறட்சியால் கருகிய பயிர்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் செலுத்தியும், கடந்த 2 ஆண்டுகளாக இழப்பீட்டு தொகை வழங்காமல் அதிமுக அரசு ஏமாற்றி வருகிறது என்கின்றனர் விவசாயிகள். இவர், 10 ஆண்டுகளாக செய்யாததை, வரும் 5 ஆண்டுகளில் மட்டுமா செய்யப்போகிறார் என்ற குற்றச்சாட்டு அக்கட்சியினர் இடையே எழுந்துள்ளது.

வாக்குறுதிகளை அள்ளிவிட்டு செய்யாதவை
திருவள்ளூர் தொகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை சந்திப்பு, திருவேற்காடு சந்திப்பு, சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் புழல் சந்திப்பு, திருவள்ளூர் - பாலவாயல் இடையில் செங்குன்றம் சந்திப்பு, ஜனப்பன்சத்திரம் சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்டப்படும். திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, கேந்திரிய வித்யாலயா பள்ளி, தொழில்நுட்ப கல்லூரி கொண்டு வரப்படும்.

ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். ஆவடி, திருவள்ளூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதையெல்லாம் கடந்த தேர்தல்களில் வாக்குறுதிகளாக அள்ளிவீசிவிட்டு, அரசு நிகழ்ச்சிகள் ஒன்றிரண்டில் வேணுகோபால் தலை காட்டுவதுடன் சரி. தொகுதி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. இப்போது மூன்றாவது முறையாக அவருக்கே சீட் வழங்கப்பட்டதால் ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கள நிலவரம்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் செயல் தலைவரான முனைவர். கே.ஜெயக்குமார் போட்டியில் உள்ளார். இவர் ஏற்கனவே பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டவர். தொகுதிக்கு அறிமுகமானவர். அதிமுக சார்பில், ஏற்கனவே 10 ஆண்டுகளாக தொகுதி எம்பியாக இருந்த டாக்டர்.வேணுகோபால் மூன்றாவது முறையாக போட்டியில் உள்ளார். 10 ஆண்டுகளாக எதையும் செய்யாத நிலையில், கூட்டணி கட்சியில் பாமக, தேமுதிக, பாஜ இருந்தாலும் கிராமங்களில் வரவேற்பு இல்லாததால் சோர்ந்து போயுள்ளார். அமமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ பொன் ராஜா போட்டியிடுகிறார். இவர் அதிமுகவின் வாக்குகளை மட்டுமே குறிவைத்துள்ளார். இதனால், இவரது செயல்பாடும் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது.

இத்தொகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் உள்ளனர். அடுத்தபடியாக வன்னியர், முதலியார் சமூகத்தினர் உள்ளனர். மேலும், 18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஓட்டுதான் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதாக உள்ளன.இங்கு அதிமுக, பாஜ மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதால், ‘’கை’’ எளிதாக வெற்றிக்கனியை பறிக்க வாய்ப்பு உள்ளது என்பதுதான் களநிலவரம். திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரை காங்கிரஸ் வேட்பாளர் அனுசரித்து செல்வதோடு, கடுமையாக உழைத்தால் திருவள்ளூர் தொகுதியில் திருப்பம் ஏற்படுவது உறுதி.

இதுவரை எம்பியாக இருந்தவர்
தொகுதி மறு சீரமைக்கு பின்னர் 2009ல் நடந்த தேர்தலிலும், 2014ல் நடந்த தேர்தலிலும் அதிமுகவின் டாக்டர் வேணுகோபால் வெற்றி பெற்றுள்ளார். தற்போது தேர்தலிலும் அவரே களத்தில் உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress-AIADMK ,Tirur , Congress, AIADMK, Tiruvallur,
× RELATED நீட் மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றலாமா?: பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு